Tuesday, June 30, 2009

எல்லோருக்குமான வாசனை


முன்கூட்டியே எடுத்த
தீர்மானங்களினூடான
உங்கள் பார்வைகள்
என்னைக்
காயப் படுத்துவதில்லை

எனக்கான உருவெளித்தோற்றம்
என் செயலகளிலிருந்தும்
நான் உதிர்த்த சொற்களிலிருந்தும்
உங்களால் கட்டமைக்கப்பட்டதல்ல
அது
பிறிதொன்றாகவே
இருக்கிறதெப்போதும்

நிஜமான என்னிலிருந்து
இல்லாத என்னைப் பிரித்தறிய
முயலும் உங்கள்
செயல்களின் மீதெனக்கேதும்
துவேஷமில்லை


என்றாலும்
மொட்டுக்கள்
மலர்கின்றன
எல்லோருக்குமான
வாசத்தைச்
சுமந்தபடி.

.

Monday, June 29, 2009

ஃப்ளாஷ் பேக்


திரையரங்கை ஒட்டி இருக்கும் மண்டபத்தில்தான் சரவணன் தங்கை ரேவதிக்குத் திருமணம். முதல்நாளிரவே வரச் சொல்லி அன்புக் கட்டளை. சொன்னபடி ஆஜராகிவிட்டேன் குடும்பத்துடன். காரைப் பார்க்கிங் பண்ண இடம் கிடைக்கத்தான் தாமதமாகி விட்டது. அடுத்த வீதியில்தான் நிறுத்த முடிந்தது.

மண்டபத்தை கலை ரசனையுடன் அலங்கரித்திருந்தனர். முதல் நாள் இரவு வரவேற்பு என்பதால் மணவறை அலங்காரம் ஏதும் செய்யவில்லை. நள்ளிரவில் ஆரம்பித்து அதிகாலையில் முடிப்பார்கள். அதற்குத் தேவையான சம்பங்கி மற்றும் கலர் பூக்கள் அருகே மூட்டையில் தயாராக இருந்தது.

நடை பழகும் யுவதிகளும், அவர்களைப் பின் தொடரும் வாலிபர்களும், இன்று பார்க்கமுடியாமல் போன சீரியலில் என்ன ஆகியிருக்கும் என்று அலசும் மாமியார்களும் , அடுத்து என்ன புடவை வாங்கலாம், என்ன நகை வாங்கலாம் என திட்டம் போடும் நடுவயதுப் பெண்மணிகளும், தயாராக இருக்கும் மகளின் கல்யாணச் செல்வு குறித்த கவலை தோய்ந்த பெரிசுகளுமென மண்டபம் கலந்துகட்டி நிறைந்திருந்தது. இந்தக் கவலைகள் ஏதுமற்றுச் சுற்றித் திரிந்த குழந்தைகள் கூட்டம் ஒரு சோபை தந்திருந்தது.

”டாடி மம்மி வீட்டில் இல்லை” என்ற ரகசியத்தை இசைக்குழுவினர் சத்தமாக எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருந்தனர். நாதஸ்வரமும், தவிலும் உறையிலிருந்து பிரிக்காமல் சுவரோரமாகத் தள்ளி வைக்கப் பட்டிருந்தது. வீடியோக்காரர்கள் பி சி ஸ்ரீராம் லெவலுக்கு சுட்டுக் கொண்டிருந்தார்கள். புகைப்படக் கலைஞரும் சளைத்தவர் இல்லை.

வாழ்த்துவோருக்கான வரிசை நீண்டதாக இருந்தது. எல்லோரும் மாப்பிள்ளை சைடு. ரேவதியின் அழகிலும் குணத்திலும் மயங்கி மணமகன் முறையாகப் பெண் கேட்டு நடக்கும் திருமணம். மணமகனும் ரேவதிக்கேற்ற அழகன். மணமகன் வீட்டினருக்கும் ரேவதியைப் பிடித்துப் போக எல்லாச் செலவும் தங்களுடையது எனச் சொல்லிவிட்டனர்.

ரவணனும் நானும் ஒன்றாக டிப்ளாமோ படித்தோம். பின் இருவரும் இரு வருடங்கள் மண்டபத்தின் பின்பக்கத் தெருவில் ஒரு அறையில் தங்கிச் சின்னச் சின்னக் கம்பெனிகளில் வேலை என்ற பெயரில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தோம். நல்ல வேலையில் செட்டிலாக இருவருக்குமே மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது; வேறு வேறு ஊர்களில்.

“இந்த மண்டபம் ஞாபகமிருக்காடா?” என்றான் சரவணன்.

“மறக்க முடியுமாடா?” என்றேன் பேச்சிலர் தின ஞாபகங்களுடன்.

” எந்தங்கச்சி கல்யாணம் இவ்வளவு பெரிய மண்டபத்துல நடக்கும்னு நான் நெனைச்சுக் கூடப் பார்க்கலடா?” என்றான் விழிகள் உதிர்த்த கண்ணீர் முத்துக்களுடன்.

சரவணனின் தோளைத் தட்டி அமைதிப் படுத்தினேன். அதற்குள் வேறு யாரோ, “மாப்ப்பிள்ளை பட்டுவேட்டி சட்டை எங்க வச்சிருக்கீங்க” என்று அவனைக் கூப்பிட என்னை விட்டுப் பிரிந்தான்.

ரவுப் பந்தி நடக்க ஆரம்பித்திருந்தது. டைனிங்க் ஹால் அமளிதுமளிப்பட்டது. இரண்டு மூன்று பேர் ஒரு இளைஞனைத் தாக்கிக் கொண்டிருந்தனர். விலக்கி விட்டு என்னவெனக் கேட்டதில், “ நானும் வந்ததிலிருந்து பாக்குறேன் சார். பேந்தப் பேந்த முழிக்கிறான். நான் கேட்டா மாப்பிள்ளை வீடுங்கிறான். அவர் கேட்டதுக்கு பொண்ணு வீடுங்குறான். சாப்பாட்டுக்குன்னே வந்திருக்கான் சார்”

“சரி சரி விடுங்க நான் விசாரிக்கிறேன்” என அவன் தோள் மீது கை போட்டு அவனை தனியே அழைத்து வந்தேன்.

“சார் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. மில்லுக்குப் போயிட்டிருந்தேன் இப்ப அதுக்கும் வழியில்ல. கட்டிட வேலைக்கும் போய்ப் பார்த்தேன். என்னால முடியல. இன்னைக்கு நைட் சாப்பிட்டா எப்படியும் ரெண்டுநாள் தாக்காட்டிடுவேன். ப்ளீஸ்”

அவனை அழைத்து வந்து தியேட்டருக்கு முன் இருக்கும் புரோட்டாக் கடையில் முட்டை புரோட்டாவும் குடல் குழம்பும் வாங்கித்தந்தேன். என் விசிட்டிங்க் கார்டைக் கொடுத்து “ நாளை மறுநாள் என்னை வந்து பார். ஏதாவது வேலை தருகிறேன்” என்றேன்.

“நன்றி சார். இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் “ என்றான் கலங்கிய கண்களுடன்.

“சரி சரி. மறக்காம வா “ என்று அவனை அனுப்பிவிட்டு மண்டபத்துக்குள் நுழைந்தேன்.


வேகவேகமாக என்னை நோக்கி வந்த சரவணன், ”எங்கடா போன இவ்வளவு நேரம்? ஏதோ பிரச்சினைன்னு சொன்னாங்க, என்னடா?” என்றான்.

“ஞாபகமிருக்கான்னு கேட்டியே இங்க ஒருத்தன் பிளாஷ் பேக்க நடத்தியே காமிச்சுட்டுப் போயிட்டான்.”

“பாவம், நம்ம டெக்னிக் அவனுக்குத் தெரியலை அதான் மாட்டிக்கிட்டான்” என்றான் சரவணன் ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவாறே.


உரையாடல் - சமூக கலை இலக்கிய அமைப்புச் சிறுகதைப் போட்டிக்கு எனது படைப்பு.

.

பொதுவில் வை(த்)தல்



Blogging is a public activity with no right to anonymity


வலையில் எழுதுவது சுலபமாகவும், அதன் எதிர்வினைகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள வசதி இருப்பதாலும் மேலும் மேலும் புதியவர்கள் எழுத வருகிறார்கள். மகிழ்கிறேன். ஆயின் தமக்கான எல்லைகள் எது என்பதைக் கொஞ்சம் தெரிந்து தெளிதல் நலம் . பின்னூட்டம், ஹிட்ஸ், ஃபாலோயர்ஸ் போன்றவற்றை நோக்கமாக வைத்தெழுதாது நேர்மையாகத் தோன்றுவதை எழுதுவது உத்தமம்.

இங்கிலாந்து காவலர் ஒருவர் பிளாக் பற்றிக் கேள்விப்பட்டு, கவரப்பட்டு தனெக்கென ஒரு வலைப்பூ தொடங்கி, அதில் தனது பணிக்காலத்தில் சந்தித்த சவாலான குற்றங்களையும், அதை அவர் துப்பறிந்த விதத்தையும் எழுதுகிறார். அதிகாரிகள் அவ்வாறு அரசாங்க ரகசியங்களை வெளியிடக்கூடாதென்பதால் தனதடையாளத்தை மறைத்து புனைபெயரொன்றில் எழுதுகிறார்.

ஒவ்வொரு குற்ற நடவடிக்கையிலும் அரசியல்வாதிகள் தலையீடு, மஃபியாக்கள் தலையீடு போன்றவற்றை எவ்வித ஒளிவு மறைவேதுமின்றி எழுதுகிறார். மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. யாரவர் என எல்லோருமாவலுடன் தேடத்தலைபடுகின்றனர்.

இவரைக் கண்டறிய முயலும் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர், முதலில் அவரது பதிவு ஒன்றிற்குப் பின்னூட்டம் இடுகிறார். தானும் ஒரு வலைப்பதிவரென அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார். அவரை ஆகா ஓகோவெனப் புகழ்கிறார். பிறிதொரு நாளில் வலைப்பதிவர்கள் சந்திப்பெனச் கூறி இடமொன்றைக் குறித்து வரச் சொல்லி, அவரை அடையாளம் காட்டுகிறார் உலகிற்கு.
நைட் ஜேக் என்ற பெயரில் வலைத்தளம் வைத்திருந்த
ரிச்சர்ட் ஹார்டன் - லங்காஷையர் காவலர்.

பொதுவாக வலையில் எழுதுவது தனிமனித சுதந்திரம் அதை நீதிமன்றம் தடை செய்ய முடியாதென்று அவரது வக்கீல் வாதாட, நீதிபதி சொன்ன தீர்ப்பு, “ வலையில் எழுதுவது தனிப்பட்ட செயல் அல்ல. அது ஒரு பொதுச் செயல். எனவே எழுதப்பட்டதற்கு எழுதியவர்தான் பொறுப்பேற்கவேண்டும்.”

எழுதியவன் இறந்துவிட்டான் இனிப் பேசுவது எழுத்துத்தான் என்று பி ந வாதிகள ஜல்லியடிப்பதை வலைக்குச் சொல்ல முடியாது. எழுதப்பட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் எழுதியவரே பொறுப்பாளர். எனவே எழுதுமுன் யோசியுங்கள். எழுதி்யபின் வருத்தப் படுவதைக் காட்டிலும் அது சுலபமல்லவா? உங்களது அலைவரிசையில் உள்ளவர்களுக்கு பதிவை மின்ஞ்சல் செய்து கருத்து கேட்டபின், தேவையான திருத்தங்களைச் செய்து பதிவிடல் சாலச்சிறந்தது. குறிப்பாக அரசாங்க வேலையில் இருப்பவர்கள் அதிக விழிப்புடன் இருத்தல் ஆகச் சிறந்தது.

நீங்கள் எழுதியதற்கு ஒருவர் எதிர்ப் பதிவு எழுதி பின் ”அவனைத் தூக்கச் சொல் நான் தூக்குகிறேன்” என்பது போன்ற வீர வசனங்களும் அறைக்கூவல்களும் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கா. மாறாக உங்களை வீழ்த்திவிடக்கூடும்.

அதுதான் பிரச்சினைக்குரிய பதிவையே நீக்கி விட்டோமே என நீங்கள் நிம்மதியாக இருக்கவும் வழியில்லை. உங்களுக்கே தெரியாமல் உங்களை ரீடரில் வாசிப்போர் அனேகம் பேர். அவர்களதை அதை நீக்கும்வரை இருக்கக்கூடும்; ஒரு மெளனசாட்சியாக அவர்களது கணினியில்.

பொதுவில் ஒன்றை வைக்குமுன் மனதிலிதை வைப்பது நலம்.

Courtesy : news.bbc.co.uk
.

பி.கு : வைதல் - திட்டுதல்.

.

Friday, June 26, 2009

வெயிலானை வாழ்த்துவோம் வாங்க



இனிய நண்பரும் பதிவருமான வெயிலானுக்கு இன்று பிறந்த நாள்.




உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் ரமேஷ்.

.

Monday, June 22, 2009

பேசாத பேச்செல்ல்லாம்....




நெடுநாட்களாகப் பிரிந்திருந்த
நண்பனைச் சத்திந்த
பொழுதொன்றில்...

கலைந்து செல்லும்
மழை மேகங்களையும்
சுழன்றடிக்கும் காற்றையும்
பூத்தூறல் மழையையும்
ரசித்தவாறே உரையாடினோம்

பங்குச்சந்தை, பணவீக்கம்
பெட்ரோல் விலை
மாருதி ரிட்ஸ்
பொருளாதாரத் தேக்கம்
பொறியியல் அட்மிசன்
மெட்ரோ ரயில்
விமானக் கட்டண ஏற்றம்
என எல்லாம்


நானாகக்
கேட்கவில்லையென்றாலும்
அவனாவது
சொல்லிச் சென்ன்றிருக்கலாம்

எனது
முன்னாள் காதலி
அவனது
இன்னாள் மனைவி்
பற்றி
ஒற்றை வார்த்தையேனும்.

.

ரிமோட் கண்ட்ரோல்

096

காலை 6:05

“ஏங்க பால்காரன் பால் போட்டுட்டானா?”

“போட்டுட்டாம்ப்பா”

“சரி எவர்சில்வர் குக்கர்ல வையுங்க. ரெம்ப முறுக விடாதீங்க. அப்புறம் தீஞ்ச வாசனை வருதும்பீங்க”

088

காலை 7:30

“ஏங்க பேப்பர்காரன் ரெண்டு பேப்பரும் போட்டானா”

“ம் ம்”

“அவள் விகடன்?”

“போடலியே”

“ஏஜெண்டுக்கு போனப் போட்டுக் கேளுங்க. வரலைன்னு சும்மா உக்காந்தா ஆச்சா?”

“சரி கேக்குறேன். இல்லைன்னா சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது பாத்து வாங்கிட்டு வர்ரேன்”

093

காலை 8:30

“கிளம்பீட்டிங்களா?”

“கிளம்பீட்டே இருக்கேன்”

“பின்னாடிக் கதவச் சாத்தியாச்சா?”

“ஆச்சு”

“சமையல் ரூம் ஜன்னல்”

“ம் ம்”

“ஃபேன் லைட்டு எல்லாத்தையும் ஆப் பண்ணியாச்சா?”

“ஆச்சுப்பா”

“சரி சரி எதுக்கும் மெயின் ஸ்விட்ச ஆப் பண்ணிட்டுப் போங்க உங்கள நம்ப முடியாது”

097

காலை : 11.00 மணி

“ஏங்க கரண்ட் பில்லக் கட்டீட்டிங்களா?”

“கட்டீட்டுத்தான் ஆபீசுக்கே வந்தேம்ப்பா”

“இல்ல மறந்துட்டீங்கன்னா? அதுக்குத்தான். ஒவ்வொண்ணிஅயும் உங்களுக்கு ஞாபகப்படுத்தணுமே.”

089

மதியம் 1:00 மணி

“ஏங்க சாப்பிட்டாச்சா”

“இப்பத்தான் போயிட்டிருக்கேன்”

“கொறிச்சுக்கிட்டு இருக்காம நல்லாச் சாப்பிடுங்க. இது புடிக்கல அது புடிக்கலன்னு சொல்லி மிச்சம் வைக்காமச் சாப்பிடுங்க. உருளைக் கிழங்கு இருந்தா ஒதுக்கி வச்சுடுங்க. ஊறுகாய் போட்டுக்க வேணாம். தயிர் வேண்டாம் மோரே போதும். சரியா?”

“சரீஈஈ”

087

மாலை 4:00 மணி

“எத்தனை மணிக்குக் கிளம்புவீங்க?”

“மீட்டிங்க்ல இருக்கேன் அப்புறம் கூப்பிடுறேன்”

092

மாலை 6:00 மணி

“போகும்போது ஏஜண்ட் வீட்டுக்குப் போய் அவள்விகடன் வாங்கீட்டுப் போயிடுங்க. நாளைக்குப் போனா காப்பி இல்லைன்னு சொன்னாலும் சொல்லுவாங்க. மறந்துடாதீங்க.”

“சரிப்பா”

090

இரவு 7:30 மணி

“டிபன் சாப்பிட்டுட்டீங்களா?

“ஆச்சுப்பா”

“எங்க சாப்பிட்டீங்க?”

“அபிராமி மெஸ்”

“என்ன சாப்பிட்டீங்க?”

“சப்பாத்தி”

“ராத்திரிக்கு ஏங்க சப்பாத்தி? சரி சரி ஜெலுசில் ரெண்டு எடுத்துக்குங்க.”

“சரி”

094

இரவு 9:00 மணி

“ஏங்க தூங்கீட்டிங்களா?”

“இன்னும் இல்லை. ஆனா இப்ப ஒண்ணு தோனுது”

”என்னங்க?”

“இந்தக் கொடுமைக்கு நீ ஊருக்குப் போகாமலேயே இருந்திருக்கலாம்”

படங்கள் நரன் அனுப்பியவை. எதை? எப்படி? எதால்? எனச்சொல்ல முடியுமா?


பள்ளி வயதில் வெள்ளை காகிதத்தில் பேனா மையை தெளித்து பின் அதை நான்காய் , எட்டாய் மடித்த பின் கிடைக்கும் உருவத்தை போன்றவை, இவ்வகை புகைப்படங்கள்.

முழுவதும் இருட்டாக்கப்பட்ட அறையில் நாம் திருவிழாக்களுக்கு கட்டிவிடும் சீரியல் பல்ப்புகளை தொங்கவிட்டு கேமராவை வேகமாக ஆட்டியபடியே க்ளிக் செயும் பொழுது இது போன்ற படங்கள் கிடைகின்றன .

இம்மாதிரி புகைப்படங்கள் எடுக்கும் பொழுது நல்ல தரமான செல்போன் வகை கேமராக்கள் இருந்தால் நலம்.

அன்பும் ,நன்றியும்
நரன்



Friday, June 19, 2009

கூடல் சங்கமம்


நானும் செல்வேந்திரனும் செல்வதாகத் திட்டம். முத்துவேலும் யாத்ராவும் வருவதாகச் சொல்லியுள்ளனர். மற்றவர்கள் முன்கூட்டியே எனக்குத் தெரியப் படுத்தினால் ஒருங்கிணைப்பாளரிடம் சொல்ல ஏதுவாக இருக்கும்.

செவிக்கு உணவில்லாத போழ்து சற்று வயிற்றுக்கும் உணவிடப்படுமெனச் சொல்லியுள்ளனர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள கடவு அமைப்பினர்.

இதுவரை :- 1. யாத்ரா
2. முத்துவேல்
3. செல்வேந்திரன்
4. வடகரைவேலன்


தொடர்பிற்கு : 9659016277, 9360282812, 9366669469
.

Thursday, June 18, 2009

ஜென் என்றால் என்ன?




ஜென் என்றால் என்ன?


ஜென் என்றால் என்ன?.." கேள்வி எழுந்தது ஒரு மாணவனிடமிருந்து.


துறவி அவனைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துவிட்டுச் சொன்னார், "யாரும் அதைத் தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்"


மாணவன் விடுவதாய் இல்லை "அப்படியனால் சுவாமி. ஜென் என்னதான் சொல்லுகிறது?"


"zen teaches nothing. ஜென் சொல்லித்தருவது எதுவுமில்லை".


"அப்படியானால்....." மாணவன் இழுத்தான்...


"சும்மாயிரு.." வெகு வேகமாய் குருவின் குரல்.


மாணவன் தெளிந்தான்.




கடல்


ஒரு பெரிய கடலில் மீன்கள் உலவி கொண்டு இருந்தது. சிறிய மீன் தாய் மீனிடம் கேட்டது."எல்லோரும் கடல் கடல் என்று பேசுகிறார்கள்... அப்படியென்றால் என்ன? அது எங்கு இருக்கிறது?"


"உனக்கு உள்ளேயும் உனக்கு வெளியேயும் இருக்கிறது".


"எதனால் என்னால் அதைக் காணமுடியவில்லை?"


"ஏனென்றால் நீ பிறந்தது அங்கே தான், ஒரு வேளை உன் இறப்பும் அங்கேயே நிச்சயிக்கப்பட்டு இருக்கலாம்".



கோப்பையைக் காலிசெய்


ஒரு ஜென் ஆசிரியர் வெகு அமைதியாய் மக்களுக்கு ஜென் பற்றி போதித்துக் கொண்டு இருந்தார். அதனால் அவருக்கு அந்த வட்டாரத்தில் தனிப்பெருமையும் செல்வாக்கும் இருந்தது.


அந்த நாட்டு பேரறிஞர் என அரசனிடம் பட்டம் வாங்கிய ஒருவருக்கு இது பொறுக்கவில்லை. உடனே அவர் ”ஜென் என்பது வெறும் பம்மாத்து வேலை. அதை பொய் என்று நிருபித்து காண்பிக்கிறேன்” என்று கூறி ஆசிரியரை வாதுக்கு அழைத்து, “ஜென் என்றால் என்ன என்று சொல்லுங்கள்”என்றார்.


ஆசிரியரும் அந்த அறிஞரைத் தன் குடிலுக்கு அழைத்து சென்று அமரவைத்து ஜப்பானிய முறையில் டீ உபச்சாரம் செய்ய ஆரம்பித்தார். தேவையான எல்லா பொருள்களையும் அவர் முன்னே வைத்து கோப்பையில் முறைப்படி தேநீர் வார்க்க ஆரம்பித்தார். கோப்பை நிரம்பிய பின்னும் ஊற்றிகொண்டே இருந்தார்.


ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க இயலாத அந்த அறிஞர் "நிரம்பிய பின்னும் ஊற்றுகிறீர்களே இது எப்படி சரி பட்டு வரும் முதலில் கோப்பையில் இருப்பதை நான் காலி செய்த பிறகு ஏன் மறுபடி நிரப்ப கூடாது?" எனக் கேட்க..


ஜென் ஆசான் பதிலிறுத்தார்."அய்யா நீங்களும் இந்தக் கோப்பையும் ஒன்று, முதலில் உள்ளே உள்ளதை வெறுமையாக்குங்கள் அப்புறம் நிரப்பத் துவங்கலாம்" என்றார்

இந்த மூன்று கதைகளையும் மெயிலில் அனுப்பிய ஜீவ்ஸ்க்கு நன்றி.



கிளையை பிடித்து
தொங்காதே.
கிட்டத்தட்ட 127 ஆண்டுகள்
பழையது இந்த மரம்.
ஆனால் அதன் இலைகள்
அப்படி இல்லை



சுவரும் இல்லாமல்
ஆணியும் இல்லாமல்
பிடிமானமும் இல்லாமல்
தொங்குகிறது கண்ணாடி
நீ சிரிக்கிறாய்
உன் எதிரில் இருப்பவனும்
சிரிக்கிறான்.


கவிதை & ஜென் படம் உதவி நரன் . நன்றி.
.


Wednesday, June 17, 2009

நரனைச் சந்தித்தேன்

நடன ஒத்திகை

37, 38 எனக்
கடந்து கொண்டிருந்தது வயது
முந்தைய நாள்
பள்ளி ஆண்டு விழாவிற்கென
நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த
பதினொன்றாவது படிக்கும் மகள்
காலையில் பள்ளிக்குப் போனதும்
வீட்டில் யாரும் இல்லை
அப்பாடலை ஒலிக்க விடுகிறாள்
தன் மகளைப் போலவே
உடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்
அழைப்பு மணியை யாரோ அடிக்கும்
ஓசை கேட்டதும்
வெளியேறினாள் தன் 15 வயதிலிருந்து.


வண்ணத்துப் பூச்சி

17 வருடம் கழித்துப் பார்த்தேன்
எதிர்த்திசையில்
அவள் மகளோடு போய்க் கொண்டிருந்தாள்
பார்த்துவிட்டு எதுவுமே பேசவில்லை
அந்தக் கணம்
அவள் முகத்திலிருந்து
வயதான வண்ணத்துப் பூச்சியொன்று
வெளியேறிப் பறந்து செல்கிறது
வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி
சற்றே பதட்டமாய்.

இவ்விரு கவிதைகளை எழுதிய கவிஞர்.நரனை நேற்றுச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. கவிஞர் என்றவுடன் ஒரு ஜிப்பாவும் ஜோலனாபையுனும் காட்சி தருவார் எனக் கறபனை செய்துகொண்டு காத்திருந்தால், மணிரத்தினத்தின் படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் நேரில் வந்ததுபோல் வந்தார்.

ஆரம்பகட்ட அறிமுகத்திற்குப் பின் செல்வேந்த்திரனையும் அழத்துக் கொண்டு உரையாடலைத் தொடர்ந்தோம். தமிழ்ப் பரப்பில் சிறந்த படைப்புக்கள் மூலம் அழுத்தமான தடம்பதித்து வரும் நரனின் புத்தகமொன்றும் விரைவில் வெளிவரவிருக்கிறது. உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து போன்ற இலக்கியத்தரம் வாய்ந்த்த பத்திரிக்கைகளில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவருகின்றன.

தமிழின் முக்கியமான ஆளுமைகள் பங்கேற்கும் கூடல் சங்கமம் நிகழ்ச்சிக்கு(ஜூன் 27,28) எங்களை அழத்தார். நானும் செல்வேந்திரனும் செல்வதாகத் திட்டம். கடவு அமைப்பு நடத்தும் இவ்விழா பற்றிய விவரமான அழைப்பிதழை நாளை பதிவிடுகிறேன்.

நரன் சுவராசியமான் இளைஞர். இலக்கியம், ஓவியம் என பல்துறைகளிலும் ஆர்வமும் முனைப்பும் உள்ளவர். அவரும் செல்வாவும் உரையாடுவதை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நரன் சொன்னதில் முக்கியமாக இரு விஷயங்களைக் கவனித்தேன்.
ஆதிவாசிகளின் ஓவியங்கள் அனைத்தும் ஒரு பொதுத்தன்மையைக் கொண்டிருக்கிறது. இந்திய ஆதிவாசி, மானைக் குறிக்க உபயோகப்படுத்தும் கோடுகள்தான் பிற நாட்டு ஆதிவாசிகளாலும் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. இது ஒரு அதிசயக்கத்தக்க ஒற்றுமை.

ஜென் எதையும் நமக்குப் போதிப்பதில்லை. போகிற போக்கில் குறிப்பால் உணர்த்திச் செல்லும் விஷயங்கள் தத்துவமாகவோ அல்லது சித்தாந்தமாகவோ அவரவர் பார்வைக்கேற்ப எடுத்தாளப்படுகிறது. ஜென் சித்தாந்தம் இதுதான் என எவரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது .

ஜென் கதைகள் மீண்டுமொருமுறை படிக்கவேண்டும்

Monday, June 15, 2009

கட்டவண்டி



மாலை 5.00 மணி. கரூர் பேருந்து நிலையம். குளிர்ந்த காற்று பகலில்
அடித்த வெப்பத்திற்குப் பிராயச்சித்தம்போல இருந்தது. கோவை செல்லும்
பேருந்து ஒன்றில் நானும் எனது இளைய மகளும், முன் பக்கம் ஒட்டுனர்
அருகிலுள்ள இருக்கையிலமர்ந்தோம்.

“எத்தனை மணிக்கு எடுப்பீங்க சார்?”

“5.05 க்கு கிளம்பிடும் சார். இன்னும் ரெண்டு சீட்டுத்தான் காலி ”
கண்டக்டர் ஆள் தேத்தும் மும்முரத்திலிருந்தார்.

”எத்தன மணிக்கு கோவை போவீங்க.?” டிரைவரை நோக்கி அடுத்த கேள்வியை வீசினேன்.

“8:25க்கு சிங்காநல்லூர் போகும். இது காந்திபுரம் போகாது தெரியுமில்ல?”

சொன்னபடி 5.05க்கு கிளப்பினார்கள். மெதுவாக ஊர்ந்த பேருந்த்து மேம்பாலம்
தாண்டியதும் சற்று வேகமெடுத்தது. தென்னிலை வரை ஒரே சீரான வேகத்தில்
செலுத்தினார் ஓட்டுநர்.

டிரைவருக்குப் பின் மூன்று இளைஞர்கள் அமர்ந்து தத்தமது செல்லில்
இருக்கும் வசதிகள், வசதிக் குறைபாடுகள் பற்றி அரட்டையடித்தவாறிருந்தனர்.

மூவரில் ஒருவர் வந்த அழைப்பொன்றுக்குப் பதில் சொல்லும்போது, “மெதுவா
கட்டைவண்டி மாதிரித்தான் வருதுடா. லேட்டாகும்னு நினைக்கிறேன்.”
ஓட்டுனரைக் கவனித்தேன் தனக்குச் சம்பந்தமில்லாதது போல ஒட்டிக்
கொண்டிருந்தார் பேருந்தை.

வெள்ளகோவில் வரை ஏதும் மாற்றமில்லை வேகத்தில். ஒரு வேளை வெள்ளகோவில் தாண்டியதும் வேகமெடுப்பாரோ என நினைத்தேன்.

மீண்டும் அதே வேகம்தான். இரண்டாமவருக்கு வந்த அழைப்பிற்குப் பதில்
சொன்னார், “ ஃபோர்த் கியர்னு ஒண்ணு இருப்பதை மறந்துட்டாரு போல”

ஓட்டுனர் ஏதும் பேசவில்லை. குறைந்தபட்சம அவர்களை முறைப்பார் எனப்
பார்த்தால் அதுவுமில்லை.

காங்கேயம் வரும்பொழுது இருட்டிவிட்டது. ஆனால் அதே சீரான வேகம். கூடவும் இல்லை குறையவுமில்லை.

பல்லடம் தாண்டியதும் சாந்தாமணி பஸ் ஓவர்டேக் செய்தது. மூன்றாமவர் யாரையோ போனில் அழைத்துச் சொன்னார், “டேய் டவுன் பஸ்ஸெல்லாம் ஓவர்டேக் பண்ணுதுறா”

சிங்காநல்லூர் வரும்வரை கிண்டலின் தீவிரம் அதிகரித்தது. ஓட்டுனர் சட்டை
செய்யவில்லை. சிங்காநல்லூர் சிக்னலில் திரும்பும்போது கைக்கடிகாரத்தைப்
பார்த்தேன். மணி 8:20.

பிளாட்பாரத்தில் நிறுத்தியதும் எழுந்து ஓட்டுனரிடம் சொன்னேன், “ சார்
பத்திரமாக்வும் அலுப்பில்லாமலும் எங்களைக் கொண்டுவந்து சேர்த்ததற்கு
நன்றி.” ஒரு புன்னகையைப் பதிலாக வீசிச்சென்றார்.

ஸ்டேண்டில் விட்டிருந்த காரை எடுக்கும்போது மகள் கேட்டாள், “காலையில்
போகும்போதுகூட அந்த டிரைவரும் இதேபோல நிதானமாத்தான் ஓட்டுனாரு. ஆனா அவர
நீங்க பாராட்டலையே?”

“நிதானமா ஓட்டணும்ங்கிறது அவர் கடமை. ஆனா சீண்டிக்கிட்டே
இருக்கும்போதுகூட நிதானமிழக்காமல் அவரு கண்ணும் கருத்துமா ஓட்டீட்டு
வந்தாரே அதுதான் பாராட்டுக்குரிய விஷயம். அத நம்ம பாராட்டணுமில்லை?”

டிஸ்கி : உண்மை கலந்த புனைவு.

.

Saturday, June 13, 2009

கதம்பம் - 13/06/09

ன் புது வீட்டிற்கு BSNL இணைப்பு குடுக்க வழியில்லை எனச் சொல்லி விட்டார்கள். வலை மேய வோடபோனில் ஒரு டேட்டா கார்டு வாங்கினேன். 230 KBPS வேகம். ஒரு வலைத்தளம் லோடு ஆவதற்குள் ஆர்வமே போய்விடுகிறது. ராம் மெமரி குறைவாக் இருப்பதால்தான் எனச் சொல்லியதால் அதையும் மாற்றிப் பார்த்தாயிற்று. ஏதும் முன்னேற்றமில்லை.

899 unlimited என்ற திட்டத்தில் வாங்கிய கனெக்க்சனை இதுவரை 3 முறை கட் செய்து விட்டார்கள். கேட்டால் நீங்கள் உங்கள் கிரிடிட் லிமிட்டை விட அதிகம் உபயோகித்து விட்டீர்கள் எனச் சொல்லுகிறார்கள். கிரிடிட் லிமிட் 800 ரூபாய்; கேலிக் கூத்து.

திட்டமே 899 ரூபாய் அதற்கு கிரிடிட் லிமிட் 800ரூபாயாம். அதைவிடக் கொடுமை நான் 1900 ரூபாய் அளவுக்கு உபயோகித்து விட்டதால்தான் கனெக்சனைக் கட் செய்து விட்டார்களாம். 899 ரூபாய்த் திட்டத்தில் எப்படி 1900 உபயோகக் கட்டணம் வரும். இவர்கள் சொல்லுவதைப் புரிந்துகொள்வதை விட பி ந கவிதைகளைப் புரிந்து கொள்வது எளிது.



மெட்ரிக் பள்ளிக் கட்டணங்களைச் சரமாரியாக ஏற்றி விட்டார்கள். சில பள்ளிகளில் 50% அதிகம். கோவையில் ஒரு பள்ளி மீது வழக்குப் போட்டு தீர்ப்பு நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வரும்வரைக் கட்டணம் கட்டுவதில்லை எனப் பெற்றோர் முடிவு செய்து காத்திருக்கின்றனர்.

பரிசலிடம் பேசிக் கொண்டிருக்கையில் விளையாட்டாகச் சொன்னேன், “இதுவே ஒரு மறைமுக குடும்பக் கட்டுப்பாடுதான்”. தற்காலத்தில் யாருக்கவது இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் எண்ணம் இருந்தால் இந்த ஒரு காரணத்திற்காகவே முடிவை மாற்றிக் கொள்வர்.

ரு 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனைக்கு வரும்பொழுது பெண்ணின் தாயார்தான் உடன் வருவார். ஆனால் தற்பொழுது கணவர்கள் மிகவும் பொறுப்பாக அழத்து வந்து காத்திருந்து, காத்திருக்கும் நேரத்தில் தேவையானதை வாங்கிக் கொடுத்து என பரிவுடன் இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆரம்பத்துல அப்படித்தான் இருப்பாங்கன்னு 'சினிக்'காப் பேசினாலும் என் வயதினர் ஆரம்பத்தில் கூட அப்படி இல்லை என நினைக்கும்போது வெட்கப்படத்தான் தோன்றுகிறது.


செ
ல்வேந்திரன் கலந்துகொண்ட நீயா நானா நிகழ்ச்சியை டிவிடி-யில் பதிவு செய்து அனுப்பியிருந்தார் கும்க்கி (நன்றி).

ஆரம்பம் முதலே செல்வேந்திரன் தனது தரப்பை தெளிவாக எடுத்து வைத்தார். சினேகன்தான் சும்மா பம்மாத்துப் பண்ணிக் கொண்டிருந்தார். சினேகன் கருத்துக்களில் உடன்பாடு இல்லை செல்வேந்திரனுக்கு என்பது அவரது உடல் மொழியில் தெளிவாகத் தெரிந்தது.

ஆனால் நிகழ்ச்சியில் ஒருவர் தன் மனைவியை எருமைமாடு எனச் சொன்னது வலித்தது. தான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டு ஆக இருப்பதால்தான் இப்படிச் சொல்லுவதாக அவர் நியாயப் படுத்தியது கொடுமை. பலர் முன்னிலையிலேயே, அதுவும் உலகம் முழுவதும் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் இப்படிப் பேசியது சரியல்ல. குறைந்தப் பட்ச நாகரிகம் உள்ளவன்கூட இதைச் செய்ய மாட்டான்.

பரபரப்புக்காக விஜய் டீவி இதை எடிட் செய்யாமல் ஒளிபரப்பினார்கள் என நினைக்கிறேன். இதை அப்பெண்மணி மீதி ஏவப்பட்ட வன்முறையாகவே பார்க்க வேண்டும். இதுகுறித்துப் பெண்ணியம் பேசுமெவரும் வாளாவிருப்பதேனோ? வலையிலும் ஒருவரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யக் காணேன்.

காவலன் காவான் எனின் என்ற நாஞ்சில் நாடனின் கட்டுரைத் தொகுப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன். கன்மணி குணசேகரனின் கவிதை ஒன்றை மிகச் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார். நீங்களும் பாருங்களேன். எளிய வார்த்தைகளில் இயலாமையயைச் சொன்ன கவிதைகளில் மிகச் சிறந்தது இது; என்னளவில்.


இழுத்து மூச்சுப் பிடித்து
ஊத வேண்டிய இடங்களில்
சீவாளியைப் பிரித்துச்
சரி செய்கிறது
வயோதிக நாயனம்

இட்டு நிரப்பிச்
செல்கிறது
இளம் தவில்.

- கண்மணி குணசேகரன்.

ஐடிஐ முடித்து போக்குவரத்துப் பணிமனையில் வேலைபார்க்கும் கண்மணி குணசேகரனுக்கு தமிழ் எழுத்துலகம் மரியாதை செய்யாதது வருத்தமளிக்கிறது.
அஞ்சலை, கோரை, வெள்ளெருக்கு, ஆதண்டவர் கோவில் குதிரை போன்ற படைப்புகளைத் தமிழுக்குத் தந்தவர் அமைதியாக இருக்க, பிறர் உலக உயரத்தில் தமிழ் என முழங்குவது நல்ல நகைமுரண்.


விகடனில் வந்த நகைச் சுவை ஒன்று குபுக்கெனச் சிரிக்க வைத்தது.

என்னடா உன் கல்யாணத்துக்கு எவனுமே வரலை?

நான் தான் சொன்னேனே எனக்கொரு கஷ்டம்னா எவனும் வரமாட்டான்னு.

Wednesday, June 03, 2009

எனக்கு கேட்கத்தான் தெரியும்

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எனது யார் இந்த வடகரை வேலன் பதிவைப் படித்தால் தெரியும்

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

ஞாபகம் இல்லை; பால்யத்தில் அழுதது கணக்கில்லையெனில்.


எனக்கு நல்ல நண்பனாகவும். ஆசானாகவும், சாய்ந்துகொள்ளத் தன்னிருதோள் தந்தவனாகவும், இடித்துரைக்கும் மந்திரியாகவும் என்னை வழிநடத்திய என் தந்தை இறந்தபோதுகூட நான அழவில்லை.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்; நான் பணம் கொடுக்க வேண்டியவர்களுக்கு.

செக்கில் கையெழுத்துப் போடுவதைத் தவிர தற்பொழுது ஏதும் எழுதுவதில்லை.


4).பிடித்த மதிய உணவு என்ன?

சைவம் : கடைந்த பாசிப்பயறு, கீரைப் பொரியல், மிளகுரசம், எருமைத் தயிர்.

அசைவம் : உளுந்தம்பருப்புச் சாப்பாடு, கறிக்குழம்பு

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

சாத்தியமில்லை. அவரைப் பத்தித் தெரியணும். அலைவரிசை ஒத்துவரணும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

குற்றாலத்துக்காரங்கிட்ட கேட்டா என்ன பதில் வரும்னு தெரியாதா?

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்களை.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது – இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னா அது தற்பெருமை.

பிடிக்காதது – ஒத்திப் போடுதல்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது :– என்னைச் சகிச்சுக்கிறது.

பிடிக்காதது :- எதையும் ரெம்ப சீரியஸா எடுத்துக்கிறது.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

கேள்வி புரியவில்லை. நான் யார் பக்கத்திலா அல்லது யாராவது என் பக்கத்திலா?

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

எதாவது உடை ஜோசியம் சொல்லுவதற்காகவா?

வெள்ளைச் சட்டை, காக்கிப் பேண்ட்.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

இதில இருந்து என்ன கண்டுபிடிப்பீங்கன்னு தெரியல.

”காதல் வைத்துக் காதல் வைத்துக் காத்திருந்தேன்” பாட்டுத்தான் என் ஆல்டைம் பேவரிட். ய்வன்சங்கர், விஜய் ஜேசுதாஸ் காம்பினேசன். இதைவிடச் சிறப்பான பாட்டு இன்னும் கேட்கவில்லை.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பின்க்

14.பிடித்த மணம்?

மண்வாசனை

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

நான் யாரையும் அழைக்கப் போவதில்லை.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

னிறையச் சொல்லலாம். குறிப்பாக அவியல்.

17. பிடித்த விளையாட்டு?

இண்டோர் செஸ், டேபிள் டென்னிஸ். அவுட்டோர் கபடி.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை. கடன்காரர்களையும், பழைய காதலிகளையும் பார்த்தால் சில சமயம் அணிவதுண்டு; முக மறைக்க.


19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

இயல்பாக எடுக்கப்பட்ட திரைப் படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

லால் சலாம். மோகன்லால், வேனு நாகவல்லி காம்பினேசன்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைச் சித்தாந்ததின் மீது எழுப்பபட்ட கேள்விதான் படம். இதைப் போல ஒரு திரைப்படம் தமிழில் சாத்தியமா?

முடிந்தால் இதே காம்பினேசனில் வந்த வரவேழ்ப்பு திரைப்படத்தையும் பார்க்கவும்.

21.பிடித்த பருவ காலம் எது?

கோடை. அப்பொழுதுதான் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியும்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

மணல்வீடு சிற்றிதழ். ஆசிரியர் ஹரிகிருஷ்ணன்.

தஞ்சைப் பிரகாஷ் கட்டுரைகள்.


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

நான் மாற்றுவதேயில்லை. யாராவது மாற்றி வைப்பார்கள். பிடித்திருந்தால் தொடர்வேன். பிடிக்காவிட்டாலும் தொடர்வேன்.


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த: பிறந்த குழந்தையின் குவா குவா.

பிடிக்காதது: அப்பா 65% அம்மா 55% இருவரும் தங்கள் குழந்தை 99.99% எடுக்க வேண்டும் என்று டார்ச்சர் செய்யும் சத்தம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

மும்பை, அனுஜன்யா வீட்டுக்கு.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இதுவரை இல்லை. வேணும்னா என் தங்கமனியக் கேளுங்க. no man is a hero to his wife.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையுடன் ஒப்பிடுவது, இதைப் போன்ற வன்முறை வேறெதுவ்மில்லை.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஏதுமில்லை.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சிங்கபூர். இன்னும் போனதில்லை.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே. எனக்கொன்றும் குறை இல்லை. நல்ல குடும்பம். அளவான வசதி. அளவு சம்பாத்யம் தரும் தொழில். உடனிருக்கும் நண்பர் கூட்டம். வேறென்ன வேண்டும்?

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

மனைவி இல்லாம வீட்டுல ஒரு காரியம் செஞ்சா மனைவி வந்து அதச் சரி பண்ண ஒம்பொது காரியம் செய்யணும். அதனால சும்மா இருப்பதே உசிதம்.

32)
வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

Happiness is found along the road; not at the end.


.

Tuesday, June 02, 2009

வாருங்கள் வாழ்த்துவோம்


பதிவர் கடற்கரைக்காரன் என்றறியப்படும் சிவக்குமரனுக்கு இன்று பிறந்தநாள்.

விழுப்புரத்தைச் சேர்ந்த சிவா, சில வருட மும்பை வாசத்திற்குப் பின் கோவை வந்திருக்கிறார். இனியெப்போதும் கோவை என்கிறார்.

வாருங்கள் வாழ்த்துவோம்.

.