சென்ற வேலை நினைத்ததைவிட சீக்கிரமே முடிந்துவிட்டதால், மாதவராஜ் பணிபுரியும் வங்கிக்குச் சென்று,
“மாதவராஜ் இருக்காருங்களா”, என்றேன் புருவத்திலேயே கேள்வி கேட்ட அவரது சக ஊழியரை நோக்கி.
“அவரு இன்னைக்கு லீவு ஆச்சுங்களே”, ஏமாற்றம் என் முகத்தில் படருவதைக் கண்ட அவர் மீண்டும் கேட்டார், “ அவரு மொபைல் நம்பர் தரட்டுங்களா?”
மொபைலில் அழைத்துப் பேசியதில் அடுத்த முனையிலிருந்து வந்த மாதவராஜின் உற்சாகம் கொப்பளிக்கும் குரல், மகிழ்ச்சி தருவதாகவிருந்தது. அவர் விடுப்பு எடுத்த காரணம் அவர்மீதான மரியாதையைக் கூட்டிச் சென்றது.
ஜனவரி 30 மகாத்மா நினைவு நாளை முன்னிட்டு சாத்தூர் ரயிலடியிலிருந்து ஒரு ஊர்வலம் ஏற்பாடு செய்து மதநல்லிணக்கத்திற்கான ஒரு முயற்சியை முன்வைத்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கவே விடுப்பு.
வீட்டுக்கு அழைத்த அவரது அன்பைத் தட்டமுடியாமல், விடுதியைக் காலி செய்து விட்டு அவர் வீடு நோக்கி நகர்ந்தேன். “சாத்தூர் பஸ்டாண்டில் இறங்கி என்னை அழையுங்கள் 5 நிமிடத்தில் வந்து விடுவேன்” என்று சொல்லியதுபோலவே வந்தார்.
வலைப்பதிவர்களைச் சந்திக்கும்போது பரஸ்பர அறிமுகம் ஏதுமின்றி உடனடியாகப் பேசலாம்; நெருங்கிய நண்பர்கள் இருவர் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து அடுத்த நாளுக்கான பேச்சை ஆரம்பிப்பது போல. அவரது வீட்டிற்கு சென்று பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் காமராஜும் எங்களுடன் இணைந்து கொண்டார். எங்கள் சந்திப்பை சுருக்கமாக இப்படிக் கூறலாம்.
5.00 மணி - பஸ்டாண்டில் பேசினோம்
6.00 மணி - மாதவராஜ் வீட்டில் பேசினோம்
7.00 மணி - காமராஜ் வீட்டில் பேசினோம்
8.00 மணி - மீண்டும் மாதவராஜ் வீட்டில் பேசினோம்
9.00 மணி - போட்டோ ஸ்டுடியோவில் பேசினோம்
10.00 மணி - உணவகத்தில் பேசினோம்
10.35 மணி - பஸ்ஸில் ஏறும்வரைப் பேசினோம்.
பேசியவற்றுள் சமகால இலக்கியம், சமகால அரசியல், பதிவர்கள் பின்புலம் மற்றும் திறமைகள் போன்றவை அடங்கும்.
சந்திப்பில் கலந்துகொண்ட இன்னுமொரு சுவராஸ்யமான நண்பர் ப்ரியா கார்திக். போட்டொ ஸ்டுடியோ ஒன்று வைத்து வீடியோ எடிட்டிங்கும் செய்யும் நணபர் இவர். இவருக்கு PIT வலைப்பூ அறிமுகம் செய்து இந்தமாதம் வெற்றிபெற்ற நிலாவின் புகைப்படத்தைக் காட்டினேன். சரியான தேர்வு முதல் பரிசுக்கு என்று அவரது கருத்தைச் சொன்னார். மாலை 5 மணிக்குப் பார்த்தபோது இருந்த அதே உற்சாகத்துடன் இரவு என்னைப் பேருந்தில் ஏற்றி விடும்வரை இருந்தார்.
காமராஜும், மாதவராஜும் மௌஸும் கீ போர்டும் போல ஒத்த சிந்தனையு்ம் தனிப்பட்ட ரசனைகளயும் உடைய இணை. வெகுகாலம் நண்பர்களாக அதுவும் எழுத்தாளர்களாக இருப்பது இன்னும் விசேசம். இவரது சிறுகதைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரையும் அவரது தொகுப்பிற்கு இவர் முன்னுரையும் எழுதியிருக்கிறார்கள். இருவரும் அருகருகே அடுத்தடுத்த வீடுகளில் வாசம்.
ஒரு பை நிறைய சாத்தூர் சேவும், ஒரு பெட்டி நிறைய இனிப்பு மிட்டாயும் (முட்டாசு) குடும்பத்திற்கும், எனக்கு மாதவராஜ் எழுதிய போதி நிலா - சிறுகதைத் தொகுப்பும், காமராஜ் எழுதிய ஒரு வனதேவதையும் ரெண்டு பொன்வண்டுகளும் - சிறுகதைத் தொகுப்பும் தணுஷ்கோடி ராமசாமி எழுதிய தோழர் நாவலும் மற்றும் மாதவராஜும், காமராஜும், ப்ரியா கார்த்திக்கும் இணைந்த உருவாக்கதில் தயாரான சிறகுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய இரு குறும்படத் தகடுகளையும் அடைத்து என்னை வழியனுப்பி வைத்தார்கள்.
என் மீது காட்டிய இந்த அன்பிற்கு கைமாறாக கொடுக்க என்னிடம் வேறெதுவுமில்லை அன்பைத்தவிர; உங்களளவுக்கு இல்லையெனினும் ஓரளவுக்கேனும்.




