
உங்களிடம் முப்பதாயிரம் ரூபாய் பணம் இருக்கிறது 500 ரூபாய் நோட்டுக்களாக. வர வேண்டிய பழைய பாக்கி வசூலானது. பணத்தை திருப்பிக் கொடுத்தவரே உங்களை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து, பேருந்தில் ஏற்றி விடுகிறார். இருக்கை தேடும் பதட்டத்தில் அவருக்கு விடை சொல்லக் கூட மறந்து விடுகிறீர்கள். இருக்கையில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொள்கிறீர்கள். இதற்குள் நகரத்தை விட்டு வெளியே வந்து விடுகிறது பேருந்து. இன்னும் 30 கி மி தூரம் போக வேண்டும். நடத்துனர் பயணச் சீட்டுக்கான கட்டணத்தைக் கேட்டதும் 500 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுக்கிறீர்கள். அவர் உங்களை மேலும் கீழும் பார்த்து விட்டு, நிறுத்தச் சொல்லி இறக்கி விடுகிறார். எப்படி உணர்வீர்கள்?
நெடுந்தூரம் பயணம் செய்து ஒரு நகரத்தை அடைகிறீர்கள். இயற்கை உபாதை கழிக்க இடம் தேடுகிறீர்கள். கட்டணக் கழிப்பிடத்தை அடைந்து 50 ரூ நோட்டை நீட்டுகிறீர்கள். சில்லரை இல்லை எனச் சொல்லி உங்களை மறுதலிக்கிறார். எப்படி உணர்கிறீர்கள்?
உங்கள் காரை பழுது நீக்க விட்டிருக்கும் நாளொன்றில், நடு இரவில் வந்திறங்கிய உறவினரை அழைத்துச் செல்ல ஆட்டோ பேசுகிறீர்கள். ஆட்டோக்காரர் இருக்கையிலிருந்து அசையாமலேயே உங்களை உதாசீனப் படுத்துகிறார். எப்படி உணர்வீர்கள்?
அந்த அரசாங்க உயரதிகாரியை உங்களுக்கு நன்றாகத் தெரியும். நல்ல பழக்கமும்கூட. அந்த அலுவலகத்தில் ஆக வேண்டிய காரியம் ஒன்றை அவரிடம் வேண்டிச் செய்து கொள்கிறீர்கள். அதில் செய்ய வேண்டிய திருத்தம் ஒன்றிற்காக மீண்டும் அதே அலுவலகம் செல்லும்போது அட்டெண்டரால் உதாசீனப் படுத்தப் படுகிறீர்கள்.
உங்கள் முதல் குழந்தையை பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறீர்கள். உலகின் உச்சத்தில் இருப்பதாக உணர்கிறீகர்கள். வெள்ளை நிற தேவதைகள் அந்த ரோஜாக் குவியலை எடுத்து வந்து உங்கள் கையில் கொடுக்கக் காத்திருக்கிறீர்கள். மாறாக, கொண்டு வந்து கொடுப்பவர் எரிச்சல் பட்டவாறே “ம்ம் பார்த்துக்குங்க ” என்கிறார் ஏதோவொரு பண்டமொன்றைப் போல. எப்படி உணர்வீர்கள்?
இதைப் போன்றோ அல்லது இதைவிடக் கூடுதலாகவோ ஒவ்வொரு நாளும் அவமானம் நம்மைப் பிடுங்கித் தின்றவாறே இருக்கிறது. தவிர்க்கவியலா கையாலாகாத்தனத்தின் பிடியிலாட் பட்டிருக்கிறோம்.
இன்னார் இவரென்ற பாகுபாடுகளேதுமற்று, எவர் வாயிலிருந்தும் வெளிப்படும் வார்த்தைகள் அவமானப்படுத்தலைத் தவிர வேறொன்றையும் இலக்காகக் கொள்வதில்லை.
பெற்றோர், உற்றார், உறவினர், கொண்டான், கொடுத்தான், உடன் பிறந்தோர், கட்டியவள், நண்பன், ஆசிரியர், அலுவலக மேலதிகாரி, முதலாளி என யாவருக்கும் இஃதொன்றே பிரதானத் தொழிலோ?
விளக்கணைத்ததும் கவிழும் இருட்டைப் போல அவமானம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. மேற்சட்டையிட்டு ஒட்டிய வயிறு மறைத்தல் போல அவரவரால் இயன்றதைக் கொண்டு மூடி மறைத்து வாழ்தல் இயல்பாகப் போயிற்றிங்கு.
அவமானத்திற்குள்ளாக்குபவனுக்கு உள்ளாக்கிய சந்தோஷம் ஒன்றே கிட்டுகிறது. ஆகிற காரியம் ஆகும்போதுதான் ஆகிறதென்றாலும் அவமானத்திற்குள்ளக்குவதால் அவசரமாக ஆவதில்லை. எனினும் அவமானத்திற்குள்ளானவன் சபை நடுவே ஆடை விலகியவன் போலாகிறான். அதுவல்ல நோக்கமென்றாலும் அஃதொரு ஊக்குவிணையாக அமையலாம் சில பொழுது.
என்றாலும் ஆக்குபவனும், ஆக்கப் படுபவனுக்குமான இடைவெளி இந்தப் புள்ளியிலிருந்து இந்தப் பொழுதிலிருந்தே விரியத் தொடங்கி விடுகிறது. மேலுமது ஒரு பொழுதும் ஒத்திசைவைத் தருவதில்லை. நிர்பந்தத்தின் காரணமாயொரு சமயம் இசைவது போலிருந்தாலும், அது காட்சிப் பிழையேயன்றி வேறில்லை. உள்ளிருக்கும் வன்மம் காத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பிற்காக.
எவ்வாறாயினும், ஒன்றையடைந்ததும் அதன் மீதான ஆசை நீர்க்க, அடுத்ததொன்றிற்கேங்கும் வாழ்க்கை, தடித்துப் போகவைத்திருக்கிறது நமது தோலை.
எதையெதையோ எதெதுவோடோவெல்லாம் கட்டிக் கலந்து தின்று பழகிய நமக்கிப்போது உணவாக ஆகிப் போனது அவமானங்களே; அதையே தின்கிறோமென்ற அவமானமுமற்று.
எனக்கிருக்கும் ஐயமொன்றுதான். வாழ்க்கையென்பதென்ன? நாம் வாழ்ந்து கொண்டிருப்பதா? அல்லது இழந்து கொண்டிருப்பதா?

15 பேரு பாராட்டியிருக்காங்க:
அருமையான பதிவு..நல்ல பகிர்வு
\\ எனக்கிருக்கும் ஐயமொன்றுதான். வாழ்க்கையென்பதென்ன? நாம் வாழ்ந்து கொண்டிருப்பதா? அல்லது இழந்து கொண்டிருப்பதா//
ரெண்டும் தான் தலைவரே. ஒன்றை கொடுத்துத்தான் மற்றொன்றை பெறுகிறோம்..
//வாழ்க்கையென்பதென்ன? நாம் வாழ்ந்து கொண்டிருப்பதா? அல்லது இழந்து கொண்டிருப்பதா//
//
அருமை அண்ணாச்சி.
பதிவு நல்லாத்தான் இருக்கு.ஆனா 9வது பாராவிலிருந்து ஏன் தமிழ் பரிதிமாற் கலைஞர்(வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்) அல்லது சிறு பத்திரிக்கை
தமிழுக்குத் தாவுகிறது.
புரிகிற மாதிரி சாதாரணமாக எழுதலாமே!
நன்றி TVRK சார்.
நன்றி ரோமியோ
நன்றி பாரி
நன்றி ரவி.
பொதுவாக சிரத்தை எடுத்து நீங்கள் விமர்சித்தாலும் சில சமயம் அது படைப்பாளியை நோகடிக்கிறது. அது உங்களுக்குப் புரிந்து செய்கிறீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை.
இலக்கியப் பரப்பில் sweeping statement சொல்லுவதுதான் ஆளுமையை நிலை நிறுத்த உதவுவது.
இலையராஜாவுக்கு இசையமைக்கத் தெரியாது என சாரு சொல்வது போல.
பரிதிமாற் கலைஞரை எதற்குக் கோட் பண்ணியிருக்கிறீர்கள்? சிற்றிதழ்கள் எல்லாமே இதே போல நடை உள்ளவை என்ற பொத்தாம் பொதுவான கருத்தை எதிர்க்கிறேன். ”வார்த்தை” சிற்றிதழைப் படித்திருக்கிறீர்களா? எளிய நடை.
கால்தடம் என ராஜசுந்தர்ராஜன் எழுதுவதைப் படித்திருக்கிறீர்களா தமிழினியில்? அந்த மொழி நடையையும் பாதசாரியின் மிக எளிய மொழிநடையும் கொண்டு வருகிறது தமிழினி. எனவே தமிழினியின் மொழி என எதைச் சொல்லுவீர்கள்?
அகநாழிகையின் மொழி நடை எது ஜ்யோவ்வோடதா இல்லை லக்கியோடதா?
ஜிப்பாவும் டி ஷர்ட்டும் வேறு வேறு உடைகள். அணிபவர் விருப்பத்தைப் பொறுத்தது.
அது என்ன பதிவு நல்லாத்தான் இருக்கு?
நல்லா இருக்கு அல்லது இல்லைன்னு நேரடியாகச் சொல்லலாமே.
அவமானப்படுவதைப் பற்றி பதிவெழுதினால் நீங்கள் பின்னூட்டமிட்டு அவமானப் படுத்துகிறீர்கள்.
அவமானங்கள் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு நம்மை கொண்டு செல்லும். தாங்கியோ தாண்டியோ போய்த்தான் ஆகணும்.
மிக அருமையான இடுகை..
பல நேரங்களில் மனதை கசக்கிய அவமானத்தை இது தவிர்க்க முடியாது என லேசாக மாற்றிய உணர்வு
பின்னூட்டத்தில் கடைசி சில வரிகளில் இருக்கும், உங்கள் கோபம் மட்டும் நெருடுகிறது
//நெடுந்தூரம் பயணம் செய்து ஒரு நகரத்தை அடைகிறீர்கள். இயற்கை உபாதை கழிக்க இடம் தேடுகிறீர்கள். கட்டணக் கழிப்பிடத்தை அடைந்து 50 ரூ நோட்டை நீட்டுகிறீர்கள். சில்லரை இல்லை எனச் சொல்லி உங்களை மறுதலிக்கிறார். எப்படி உணர்கிறீர்கள்?//
எதவேணா தாங்கிக் கலாம் தல ...
இந்த மேட்டர்ல விட்டுக் கொடுக்க முடியாது .....
அங்கேயே தொர தொரன்னு போயிற வேண்டியதுதான்
//அவமானப்படுவதைப் பற்றி பதிவெழுதினால் நீங்கள் பின்னூட்டமிட்டு அவமானப் படுத்துகிறீர்கள்//
அண்ணாச்சி!வலையில் நன்றாக எழுதும் பதிவர்களில் நீங்களும் ஒருவர்.கோபப்படாதீங்க.
புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்.
சரியா புரிதல் இல்லை என்று நினைக்கிறேன்.Rubbing the wrong way?
நீங்கள்அவமானப்பட்டதாகநினைத்து என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள்.
(நான் அப்படி நினைக்கவில்லை)
படித்துக்கொண்டே வரும்போது திடீர் என்று புரியாமல்(9வது பாரா)சிரமப்பட்டேன்.ஏன் இவர் இப்படி திடீரென்று காட் ரோடில் பயணிக்கிறார் என்பதாக.
பாதி நடை முறைத்தமிழ் பாதி வேறு தமிழ்.ஏன் என்றால் இந்த தளம் வேறு.
இது ஒரு பாமர நிலையில் இருந்துதான் உணர்ந்தேன்.
படிப்பவர்களும் வேறு.இது மாதிரி,நான் படித்தமட்டில்,உங்கள் பதிவுகளில் காணப்படவில்லை.
என் பின்னூட்டம் spontaneous ஆக வந்தது.
//சில சமயம் அது படைப்பாளியை நோகடிக்கிறது.//
அண்ணாச்சி இதேயேமாத்திப்போட்டா!
”படைப்பாளியை””படிப்பவனை” என்று
//அது உங்களுக்குப் புரிந்து செய்கிறீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை.//
புரியாமல் செய்தது உண்டு.
திருத்திக்கொண்டு இருக்கிறேன்.
வருத்தப்பட்டதும் உண்டு.நன்றி.
//சிற்றிதழ்கள் எல்லாமே இதே போல நடை உள்ளவை என்ற பொத்தாம் பொதுவான கருத்தை எதிர்க்கிறேன். //
ஒரு காலத்தில் இருந்தார்கள்.
இப்போது மாறி இருக்கிறது.
//நல்லா இருக்கு அல்லது இல்லைன்னு நேரடியாகச் சொல்லலாமே//
வேறு தொனி வருவதால் மாற்றி விடுகிறேன்.நல்லா இருக்கு வடகரைவேலன்.
யோசனை:
நான் சொல்லுவதில் உண்மை இருக்கிறதா என்பதை ஒரு third umpire வைத்து செக் செய்துக்கொள்ளலாம்.
நன்றி.
//தவிர்க்கவியலா கையாலாகாத்தனத்தின் பிடியிலாட் பட்டிருக்கிறோம்.
இன்னார் இவரென்ற பாகுபாடுகளேதுமற்று, எவர் வாயிலிருந்தும் வெளிப்படும் வார்த்தைகள் அவமானப்படுத்தலைத் தவிர வேறொன்றையும் இலக்காகக் கொள்வதில்லை.//
\\என்றாலும் ஆக்குபவனும், ஆக்கப் படுபவனுக்குமான இடைவெளி இந்தப் புள்ளியிலிருந்து இந்தப் பொழுதிலிருந்தே விரியத் தொடங்கி விடுகிறது. மேலுமது ஒரு பொழுதும் ஒத்திசைவைத் தருவதில்லை. நிர்பந்தத்தின் காரணமாயொரு சமயம் இசைவது போலிருந்தாலும், அது காட்சிப் பிழையேயன்றி வேறில்லை. உள்ளிருக்கும் வன்மம் காத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பிற்காக.\\
நல்ல அலசல்..
நாம் பிறரை அவமானப்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது என்ற செய்தியை உள்ளடக்கமாக கொண்ட இது போன்ற இடுகைகளை வரவேற்கிறேன் அண்ணாச்சி..
அருமை அண்ணாச்சி.
கருத்து அருமை அண்ணாச்சி..
நன்றாக சொல்லியுள்ளீர்கள்..
//.. பின்னூட்டத்தில் கடைசி சில வரிகளில் இருக்கும், உங்கள் கோபம் மட்டும் நெருடுகிறது ..//
எனக்கும்..
எதுக்கும் நீங்க கே.ரவிஷங்கர் சொல்லுற மாதிரி ஒரு third umpire வச்சு செக் பண்ணி பாருங்க..
அண்ணாச்சி,
பல முறை படித்தேன் அண்ணாச்சி.
கடைசி வரிகள் சூப்பர்.
கடந்துவந்த பல அவமானங்கள் நினைவில் வந்துசென்றது. வாழ்க்கையின் கடினமான தருணங்கள் அவை.
போகிறபோக்கில் அவமானங்களை(யும்) தின்று தண்ணீர் குடித்து செரிமானம் செய்யவேண்டித்(தான்) இருக்கிறது,
நல்ல பதிவு அண்ணாச்சி.
Post a Comment