Tuesday, September 01, 2009

நுகத்தடி பூட்டிய


தாடிக் கொம்பென்றும்
காங்கேயம் காளையென்றும்
பார்த்துப் பார்த்து வாங்கி வந்தார்
எங்கள் மாமா.

மயிலைக்கு தவிடென்றால் குஷி
கைவிட்டுக் கலக்கும்போதே
கால்வாசித் தொட்டியைக்
காலி செய்துவிடும்

செவலைக்கு இஷ்டம்
பருத்திக் கொட்டை
இல்லையென்றால் ஏங்கும்.

குழந்தைகளென்றால்
கொள்ளைப் பிரியம்
செவலைக்கு
கொம்பு நடுவில் சொறிந்து கொடுக்க
சொக்கி நிற்கும் கண் சொருக

எட்ட வரும்போதே எட்டி உதைக்கத்
தயாராகவிருக்கும் மயிலை
ஏனோ பிடிக்கவில்லை
குழந்தைகளை அதற்கு
அதனால்
குழந்தைகளுக்கும் அதனை.

வரப்போர பசும்புல் மேய்வதில்
உயிர் செவலைக்கு
வரப்புத்தாண்டி
பயிரில் விழுவான் மயிலை.

நுகத்தடியில் பூட்டியதும்
இரண்டும் ஈருடல் ஓருயிர்தான்
இடமென்றால் இடம் வலமென்றால் வலம்
ஒத்திசைவுதான்
ஒருபோதும் இல்லை எசலி

அழுந்திக் காய்த்தக் கழுத்துக்கள்
சொல்லக்கூடும் உள்ளுக்குள்
மரத்துப் போன ஓராயிரம்

வலியோடு தொடர்வதன்றி
வேறேதும் வழியுண்டா
இரண்டுக்கும்?


படம் உதவி : www.pbase.com


.

20 பேரு பாராட்டியிருக்காங்க:

கலையரசன் said...

மீ த 1ஸ்டு..

கலையரசன் said...

//ஏனோ பிடிக்கவில்லை
குழந்தைகளை அதற்கு
அதனால்
குழந்தைகளுக்கும் அதனை//

எனக்கும் மாட்டை பார்த்தால் பயமாயிருக்குமுண்ணே..
ஆனா.. கவிதையில அழகாயிருக்குண்ணே...

தராசு said...

//நுகத்தடியில் பூட்டியதும்
இரண்டும் ஈருடல் ஓருயிர்தான்
இடமென்றால் இடம் வலமென்றால் வலம்
ஒத்திசைவுதான்
ஒருபோதும் இல்லை எசலி//

இந்த மாதிரி காளைக கிடைக்க குடுத்து வெச்சிருக்கோணுமுங்கோவ்.

பித்தன் said...

//வலியோடு தொடர்வதன்றி
வேறேதும் வழியுண்டா
இரண்டுக்கும்?//

அருமையான வரிகள்....

Mahesh said...

செவலையும் மயிலையும்... பல அர்த்தங்கள்...

அருமையான கவிதை அண்ணாச்சி..

இரா.சிவக்குமரன் said...

///வலியோடு தொடர்வதன்றி
வேறேதும் வழியுண்டா
இரண்டுக்கும்?///

மிக பிடித்த வரிகள்.
இதன் மிக அருகில், நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன், மன அழுத்தங்கள் அதிகரிக்கும்போதெல்லாம்.

மாதவராஜ் said...

வேலன்!
அருமையான கவிதை. நிறைய சொல்கின்றன.
//அழுந்திக் காய்த்தக் கழுத்துக்கள்
சொல்லக்கூடும் உள்ளுக்குள்
மரத்துப் போன ஓராயிரம் //

நேற்று நான் எழுதிய பதிவுக்கு இந்தக் கவிதையில் உங்கள் கருத்துக்களைச் சொன்ன மாதிரி இருக்கு.

அனுஜன்யா said...

நல்லா வந்திருக்கு வேலன். ஒன்றாகச் செல்லும் எந்த இரண்டுக்கும் பொருந்தும் :)

'எசலி' - சரியான பொருள் என்ன? கோவை சொலவடையா?

அனுஜன்யா

வடகரை வேலன் said...

நன்றி கலையரசன்.
நன்றி தராசு
நன்றி பித்தன்
நன்றி மகேஷ்

நன்றி சிவக்குமரன்
உங்களுக்கு மட்டுமல்ல திருமணமாகி நாலைந்து வருடங்கள் ஆன எல்லோருக்கும் பொருந்தும் விதமான கவிதை இது.

நன்றி மாதவ். என் அப்பா அடிக்கடி சொல்வார், “ தம்பி திருமணம் ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும். அப்புறம் அதுவே பழகிப் போய் விடும்”.

நன்றி அனுஜன்யா. எசலி - ”சின்னவளும் பெரியவளும் ஒரே எசலிதாம் போங்க”. அர்த்தம் - சண்டை.

கோவையில் அது ஓரியாட்டம். ”என்ர புருசங்கூட ஒரே ஓரியாட்டந்தா போங்க” (சரளா ஸ்டைலில் படிக்கவும்)

ghost said...

அருமையான கவிதை

Vinitha said...

கழு மரத்தின் கொடுமை?

D.R.Ashok said...

நல்லாயிருக்குங்க

நாடோடி இலக்கியன் said...

அருமையான கவிதை அண்ணாச்சி.

நாஞ்சில் நாதம் said...

அருமையான கவிதை அண்ணாச்சி

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க அண்ணாச்சி.

பிரியமுடன்...வசந்த் said...

//அழுந்திக் காய்த்தக் கழுத்துக்கள்
சொல்லக்கூடும் உள்ளுக்குள்
மரத்துப் போன ஓராயிரம்

வலியோடு தொடர்வதன்றி
வேறேதும் வழியுண்டா
இரண்டுக்கும்?//

வலியுடன் கூடிய வரிகள் அண்ணாச்சி அழகா இயல்பா வந்துருக்கு

லிங்காபுரம்-சிவா said...

அருமையான கவிதை !!

பட்டிக்காட்டான்.. said...

கவிதை அருமை..
படம் தான் சரியில்லை..
நம்ம காங்கேயன் காளைகளா புடிச்சு போட்டுருக்கலாம்..

பட்டிக்காட்டான்.. said...

//.. ஒத்திசைவுதான்
ஒருபோதும் இல்லை எசலி ..//

அது எசலிங்களா இல்ல எசிலிங்களா..?

எங்க வீட்டுல எசிலினு தான் சொல்லுவாங்க..!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

சிறப்பான கவிதை. ஊட்ல மயினி நெம்ப படுத்துறாய்ங்களா?