Monday, June 29, 2009

ஃப்ளாஷ் பேக்


திரையரங்கை ஒட்டி இருக்கும் மண்டபத்தில்தான் சரவணன் தங்கை ரேவதிக்குத் திருமணம். முதல்நாளிரவே வரச் சொல்லி அன்புக் கட்டளை. சொன்னபடி ஆஜராகிவிட்டேன் குடும்பத்துடன். காரைப் பார்க்கிங் பண்ண இடம் கிடைக்கத்தான் தாமதமாகி விட்டது. அடுத்த வீதியில்தான் நிறுத்த முடிந்தது.

மண்டபத்தை கலை ரசனையுடன் அலங்கரித்திருந்தனர். முதல் நாள் இரவு வரவேற்பு என்பதால் மணவறை அலங்காரம் ஏதும் செய்யவில்லை. நள்ளிரவில் ஆரம்பித்து அதிகாலையில் முடிப்பார்கள். அதற்குத் தேவையான சம்பங்கி மற்றும் கலர் பூக்கள் அருகே மூட்டையில் தயாராக இருந்தது.

நடை பழகும் யுவதிகளும், அவர்களைப் பின் தொடரும் வாலிபர்களும், இன்று பார்க்கமுடியாமல் போன சீரியலில் என்ன ஆகியிருக்கும் என்று அலசும் மாமியார்களும் , அடுத்து என்ன புடவை வாங்கலாம், என்ன நகை வாங்கலாம் என திட்டம் போடும் நடுவயதுப் பெண்மணிகளும், தயாராக இருக்கும் மகளின் கல்யாணச் செல்வு குறித்த கவலை தோய்ந்த பெரிசுகளுமென மண்டபம் கலந்துகட்டி நிறைந்திருந்தது. இந்தக் கவலைகள் ஏதுமற்றுச் சுற்றித் திரிந்த குழந்தைகள் கூட்டம் ஒரு சோபை தந்திருந்தது.

”டாடி மம்மி வீட்டில் இல்லை” என்ற ரகசியத்தை இசைக்குழுவினர் சத்தமாக எல்லோருக்கும் சொல்லிக் கொண்டிருந்தனர். நாதஸ்வரமும், தவிலும் உறையிலிருந்து பிரிக்காமல் சுவரோரமாகத் தள்ளி வைக்கப் பட்டிருந்தது. வீடியோக்காரர்கள் பி சி ஸ்ரீராம் லெவலுக்கு சுட்டுக் கொண்டிருந்தார்கள். புகைப்படக் கலைஞரும் சளைத்தவர் இல்லை.

வாழ்த்துவோருக்கான வரிசை நீண்டதாக இருந்தது. எல்லோரும் மாப்பிள்ளை சைடு. ரேவதியின் அழகிலும் குணத்திலும் மயங்கி மணமகன் முறையாகப் பெண் கேட்டு நடக்கும் திருமணம். மணமகனும் ரேவதிக்கேற்ற அழகன். மணமகன் வீட்டினருக்கும் ரேவதியைப் பிடித்துப் போக எல்லாச் செலவும் தங்களுடையது எனச் சொல்லிவிட்டனர்.

ரவணனும் நானும் ஒன்றாக டிப்ளாமோ படித்தோம். பின் இருவரும் இரு வருடங்கள் மண்டபத்தின் பின்பக்கத் தெருவில் ஒரு அறையில் தங்கிச் சின்னச் சின்னக் கம்பெனிகளில் வேலை என்ற பெயரில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தோம். நல்ல வேலையில் செட்டிலாக இருவருக்குமே மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது; வேறு வேறு ஊர்களில்.

“இந்த மண்டபம் ஞாபகமிருக்காடா?” என்றான் சரவணன்.

“மறக்க முடியுமாடா?” என்றேன் பேச்சிலர் தின ஞாபகங்களுடன்.

” எந்தங்கச்சி கல்யாணம் இவ்வளவு பெரிய மண்டபத்துல நடக்கும்னு நான் நெனைச்சுக் கூடப் பார்க்கலடா?” என்றான் விழிகள் உதிர்த்த கண்ணீர் முத்துக்களுடன்.

சரவணனின் தோளைத் தட்டி அமைதிப் படுத்தினேன். அதற்குள் வேறு யாரோ, “மாப்ப்பிள்ளை பட்டுவேட்டி சட்டை எங்க வச்சிருக்கீங்க” என்று அவனைக் கூப்பிட என்னை விட்டுப் பிரிந்தான்.

ரவுப் பந்தி நடக்க ஆரம்பித்திருந்தது. டைனிங்க் ஹால் அமளிதுமளிப்பட்டது. இரண்டு மூன்று பேர் ஒரு இளைஞனைத் தாக்கிக் கொண்டிருந்தனர். விலக்கி விட்டு என்னவெனக் கேட்டதில், “ நானும் வந்ததிலிருந்து பாக்குறேன் சார். பேந்தப் பேந்த முழிக்கிறான். நான் கேட்டா மாப்பிள்ளை வீடுங்கிறான். அவர் கேட்டதுக்கு பொண்ணு வீடுங்குறான். சாப்பாட்டுக்குன்னே வந்திருக்கான் சார்”

“சரி சரி விடுங்க நான் விசாரிக்கிறேன்” என அவன் தோள் மீது கை போட்டு அவனை தனியே அழைத்து வந்தேன்.

“சார் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. மில்லுக்குப் போயிட்டிருந்தேன் இப்ப அதுக்கும் வழியில்ல. கட்டிட வேலைக்கும் போய்ப் பார்த்தேன். என்னால முடியல. இன்னைக்கு நைட் சாப்பிட்டா எப்படியும் ரெண்டுநாள் தாக்காட்டிடுவேன். ப்ளீஸ்”

அவனை அழைத்து வந்து தியேட்டருக்கு முன் இருக்கும் புரோட்டாக் கடையில் முட்டை புரோட்டாவும் குடல் குழம்பும் வாங்கித்தந்தேன். என் விசிட்டிங்க் கார்டைக் கொடுத்து “ நாளை மறுநாள் என்னை வந்து பார். ஏதாவது வேலை தருகிறேன்” என்றேன்.

“நன்றி சார். இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் “ என்றான் கலங்கிய கண்களுடன்.

“சரி சரி. மறக்காம வா “ என்று அவனை அனுப்பிவிட்டு மண்டபத்துக்குள் நுழைந்தேன்.


வேகவேகமாக என்னை நோக்கி வந்த சரவணன், ”எங்கடா போன இவ்வளவு நேரம்? ஏதோ பிரச்சினைன்னு சொன்னாங்க, என்னடா?” என்றான்.

“ஞாபகமிருக்கான்னு கேட்டியே இங்க ஒருத்தன் பிளாஷ் பேக்க நடத்தியே காமிச்சுட்டுப் போயிட்டான்.”

“பாவம், நம்ம டெக்னிக் அவனுக்குத் தெரியலை அதான் மாட்டிக்கிட்டான்” என்றான் சரவணன் ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவாறே.


உரையாடல் - சமூக கலை இலக்கிய அமைப்புச் சிறுகதைப் போட்டிக்கு எனது படைப்பு.

.

41 பேரு பாராட்டியிருக்காங்க:

வெட்டிப்பயல் said...
This post has been removed by the author.
வெட்டிப்பயல் said...

அண்ணாச்சி,
கதை அழகு. இந்த ட்விஸ்டை எதிர்பார்க்கல... ஏதோ காதல் விஷயமா இருக்கும்னு நினைச்சேன் :)

வெற்றி பெற வாழ்த்துகள்

Suresh said...

வெற்றி பெற வாழ்த்துகள் ;)

நம்ம கதைய படிச்சிட்டு சொல்லுங்க

காதலுக்கு கண்ணில்லை ? - உரையாடல் சிறுகதைப்போட்டிக்கான சிறுகதை.

ஆ.ஞானசேகரன் said...

வெற்றி பெற வாழ்த்துகள் நண்பா...

சூரியன் said...

அழகான திருப்பம் பங்காளி ..

இரா.சிவக்குமரன் said...

அழகான படைப்பு. நிஜத்தில் எனது ஆரம்ப கால சென்னை வாழ்க்கையை நினைவுபடுத்தியது.

சகாதேவன் said...

நல்ல டெக்னிக்.
சகாதேவன்

அபி அப்பா said...

எனக்கு நடுவே மைல்டா ஒரு டவுட் எட்டி பார்த்தது. குங்குமசிமிழ் நியாபகம் வந்தது. சூப்பர் அண்ணாச்சி!

T.V.Radhakrishnan said...

வெற்றி பெற வாழ்த்துகள்

RR said...

கலக்கல்! வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணாச்சி.

லவ்டேல் மேடி said...

ஆஹா...!! எத்தன கல்யாணம் அந்த மண்டபத்துல அட்டெண்டு பண்நீருக்கீங்க.....???

சார் நீங்க அந்த ஆளுக்கு உண்மையான அன்பை குடுக்கல....!! ஒரு வேல பசிய மட்டும் போக்கி இருக்கீங்க...!! கடைசி வரைக்கும் அந்த டெக்னிக்கை நீங்க அந்த ஆளுக்கு சொல்லியே குடுக்கல....!!!!!!!! நம்மளுக்கு தெருஞ்ச கலையை எல்லாருக்குமே சொல்லிக்குடுக்கனும் .... அதுதான் முறை....!!!!

Cable Sankar said...

arumai..

cheena (சீனா) said...

கத பிடிச்சிருக்கு அண்ணாசி

வெற்றி பெற வாழ்த்துகள்

வடகரை வேலன் said...

மேடி,

அவருக்குத்தான் வேலை தருவதாகச் சொல்லியிருக்கிறேனே

சென்ஷி said...

:)))

வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

மாதவராஜ் said...

அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அனுஜன்யா said...

திருப்பம் எதிர்பார்த்தேன். ஆனா இந்த மாதிரி இல்லை. நல்லா இருக்கு வேலன். வெற்றி பெற வாழ்த்துகள்.

அனுஜன்யா

அதிஷா said...

நட்சத்திரத்துக்கும் கதைக்கும் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்

குசும்பன் said...

சூப்பர் அண்ணாச்சி!

கேரக்டர் பெயருக்காகவே இந்த கதை வெற்றி பெறும்:) என்னா பவர் புல்லானா பேரு தெரியாம அண்ணாச்சி அது:)))

Anonymous said...

Nice story

Look at this post.

தண்டோரா said...

விஜயாசேஷ மகாலில் ஒரு திருமணம்..நல்ல சாப்பாடு..மொத்த செலவு 50 காசு..மொய் கவரை வாங்கி சட்டை பையில் வெளியில் தெரியும் படி வைத்துக் கொண்டு......

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு சகோ. முடிவு ரொம்ப நெகிழ்ச்சியாவும் அதே சமயம் சந்தோசமாகவும் இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ.

Jeeves said...

கதை(!?) அருமை. நல்ல உள்ளம்னே உங்களுக்கு.. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்

கிரி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் வேலன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

கதையின் முடிவு அருமை, வெற்றி பெற வாழ்த்துக்கள்

ச.முத்துவேல் said...

கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியது. கதை நல்லாருக்கு.வாழ்த்துகள் அண்ணாச்சி.

வடிவேலன் ஆர். said...

தல கும்மிட்டிங்க போங்க கடைசி வரி திருப்பத்தை எதிர்பர்க்கவேயில்லை நல்லா இருக்குது இது கட்டாயம் பத்திரிகையில் பிரசுரமாகும். வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

ஃப்ளாஷ் பேக் என்ன என்பது உருக்கம். அருமையான கதை. வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!

கே.ரவிஷங்கர் said...

கதை பட்டு கத்திரித்தாற் போல் நறுக்கென்றிருக்கிறது.சிம்பிள் நடை.

எழுத்தாளர் சாவி அடுத்து எஸ்.வி.வி
இப்படித்தான் கச்சிதமாக எழுதுவார்கள்.

crafting of short story என்பதை வளரும்/வளராத வலை எழுத்தாளர்கள் படிக்க வேண்டும் என்று கட்டாயம் சிபாரிசு செய்கிறேன்.


கடைசி திருப்பம் எதிர்பார்க்கவில்லை.
Injected ஆக இல்லாமல் யதார்த்தமாக அமைந்திருந்தது.

சுஜாதா நடையை தவிர்க்கலாம்.
திருஷ்டி.

கடைசி பந்தில் சிக்சர் அடிப்பது போல்
க்டைசி நாளில் ஒரு சிக்சர் கதை?

வாழ்த்துக்கள்!

Vijayashankar said...

வெற்றி பெற வாழ்த்துகள் :-)

//crafting of short story என்பதை வளரும்/வளராத வலை எழுத்தாளர்கள் படிக்க வேண்டும் என்று கட்டாயம் சிபாரிசு செய்கிறேன்.//

Ditto.

--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு
http://www.vijayashankar.in

கார்க்கி said...

சூப்பர் அண்ணாச்சி

ராஜா | KVR said...

ஆரம்பம் அருமையா இருக்கு, ஆனா முடிவு தான் ரொம்ப சராசரி. கதையில் கண்டிப்பா Twist in the tail இருக்கணுமா என்ன?

வால்பையன் said...

நட்சத்திர மற்றும் கதைக்கான பரிசுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

Rangs said...

super annaachi..kalakkal...

ஆ.முத்துராமலிங்கம் said...

கடைசியான ட்விஸ்ட் நச்.
அட்டகாசமான கதை.

" உழவன் " " Uzhavan " said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலிலே வந்ததே.... கலக்கல்.. வாழ்த்துக்கள்!

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணாச்சி,
மிரண்டுட்டேன். அப்டி ஒரு முடிவ எதிர்பார்கல.

பட்டாம்பூச்சி said...

நல்ல கதை அண்ணாச்சி.
வெற்றி பெற வாழ்த்துகள்.

ரெஜோ said...

வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணாச்சி ... அழகான படைப்பு :-)

மங்களூர் சிவா said...

செம கலக்கலான கதை அண்ணாச்சி!

வடகரை வேலன் said...

பாலாஜி, சுரேஷ், ஞானசேகரன், சூரியன், சிவா, சகாதேவன், அபிஅப்பா, TVRK சார், RR, மேடி, சங்கர், சீனா சார், சென்ஷி, மாதவ்ராஜ், அனுஜன்யா, அதிஷா, குசும்பன், தண்டோரா, நவாஸ், ஜீவ்ஸ், கிரி, அமித்து அம்மா, முத்துவேல், வடிவேலன், ராமலக்ஷ்மி, ரவிசங்கர், விஜயசங்கர், கார்க்கி, ராஜா, அருண், ரங்ஸ், முத்துராமலிங்கம், உழவன், ஜோ, பட்டாம்பூச்சி, ரெஜோ, சிவா அனைவருக்கும் நன்றி.